மாதங்களில் நான் மார்கழி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* ‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்” (மாஸானாம் மார்க்க சீர்ஷோகம் -  கீதை சுலோகம்) என்றான் கண்ணன் கீதையில். மற்ற மாதங்களுக்கு இது தலைமைப் பொறுப்பு ஏற்கும் மாதம். கண்ணனை அடைய, கண்ணனுக்குப் பிடித்த மார்கசீர்ஷ (மார்கழி) மாதத்தில், பாவை நோன்பை ஆண்டாள் கடைப்பிடித்தாள்.  

* மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மனிதர்களின் ஒவ்வொரு இரண்டு மாதமும் தேவர்களுக்கு இரண்டு மணி நேரம். அந்த வகையில் தேவர்களின் சூரிய உதயமாகிய ஆறு மணி என்பது தை மாதத்தைக் குறிக்கிறது. பர தெய்வமானமன் நாராயணனை, தேவர்கள் பூஜிக்கும், பிரம்ம முகூர்த்தமான, காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை, தை மாதத்தின் முந்திய மாதமாகிய, மார்கழி மாதம் குறிக்கிறது. இந்த பிரம்ம முகூர்த்த வழிபாடு தான் “மார்கழி வழிபாடு” என்று கருதப்படுகிறது.

* பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப் படும் எந்தக் காரியமும் மிகச்சீரிய பலனைத் தரும். பிரம்ம முகூர்த்தத்தில் எந்தவித நாள், வார, திதி தோஷங்கள் இல்லை. பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் வழிபாடு நூறு மடங்கு புண்ணிய பலனை தரும் என்பதால், தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமாகிய விடிகாலை நேரத்தை, மார்கழி மாதமாக வைத்தார்கள். மார்கழி மாதத்தை “பீடை மாதம்’ என்று அறியாதவர்கள் சொல்லுவார்கள். ஆனால் மார்கழி மாதம் பீடுடைய மாதம். ஆன்மிகத்திற்கே உரிய மாதம். பெரும்பாலும் மாதத்தின் ஓரிரு நாளே ஆன்மிக முக்கியத்துவம் பெறும். ஆனால், மார்கழி மாதத்தின் முப்பது நாள்களும் ஆன்மிக முக்கியத்துவம் பெறும்.

* மார்கழி மாதத்தை “திருப்பாவை மாதம்” என்று சொல்வார்கள். திருப்பாவை ஆண்டாள் எழுதிய தமிழ் பிரபந்தம். திருப்பாவை பிரபந்தத்தில் 30 பாசுரங்கள் இருக்கின்றன. வைணவர்களிடம் ஒரு வழக்கம் உண்டு அவர்கள் மார்கழி மாதத்தின் தேதிகளைக் குறிப்பிடுகின்ற பொழுது, மார்கழி 1,2 என்று குறிப்பிடுவதில்லை. திருப்பாவையின் பாசுர தொடக்க வார்த்தையை வைத்துத் தான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக மார்கழி 1 என்று குறிப்பிடாமல், ‘‘மார்கழித் திங்கள்’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி இரண்டாம் தேதியை, திருப்பாவை இரண்டாம் பாசுர தொடக்கமான ‘‘வையத்து வாழ்வீர்காள்’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி மூன்றாம் தேதியை ‘‘ஓங்கி உலகளந்த’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி 30 ஆம் தேதியை “வங்கக் கடல்” என்று குறிப்பிடுவார்கள்.

* தமிழில் எத்தனையோ பிரபந்தங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு மாதத்திற்கு உரிய பிரபந்தமாக, அந்த மாதத்தின் பெயரோடு தொடங்குகின்ற பிரபந்தம் திருப்பாவையைத்தவிர வேறு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் இரண்டுமே மாதத்தின் பெயரோடு தான் தொடங்குகின்றது. திருப்பாவை மார்கழி என்ற மாதத்தின் பெயரோடும், நாச்சியார் திருமொழி தை என்ற மாதத்தின் பெயரோடும் தொடங்குகிறது. இன்னும் சிறப்பு இரண்டும் அடுத்தடுத்து வருகின்ற மாதங்களின் பெயர்கள் அல்லவா?

“மார்கழி” த் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே, நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (திருப்பாவை, முதல் பாசுரம்)

தையொரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி

உன்னையு மும்பியை யும்தொழுதேன்,

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. (நாச்சியார் திருமொழி, முதல் பாசுரம்)

* வைணவத்தை வளர்த்த ராமானுஜருக்கு எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. உடையவர், பாஷ்யக்காரர், எம்பெருமானார் என்று பல பெயர்கள் உண்டு. ஆனால், சதாசர்வகாலமும் திருப்பாவையை சொல்லிக் கொண்டும் தியானித்துக் கொண்டும் இருந்ததால் அவரை “திருப்பாவை ஜீயர்” என்றும் அழைப்பதுண்டு. ஆண்டாள் நாறு நறும்பொழில் பாசுரத்தில் நூறு தடா (அண்டா) வெண்ணெய், நூறு தடா அக்காரவடிசில் அழகருக்கு சமர்ப்பிப்பதாக நேர்ந்து கொண்டு பாடினாள். அவள் வாக்கு உண்மையாக வேண்டும் என்று சுவாமி ராமானுஜர், நூறு தடா வெண்ணெய், நூறு தடா அக்காரவடிசில் அழகருக்கு, ஆண்டாளின் சார்பில் சமர்ப்பித்தார். அதை சமர்ப்பித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த போது ஆண்டாள் ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாளாம்.

இதை விளக்கும் வாழித்திருநாமம்

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

(பெரும்புதூர் மாமுனி= ராமானுஜர்; பின்னானாள் =தங்கையானாள்)

* ராமாநுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு உரையெழுதியவர். பல வேதாந்த நூல்களை இயற்றியவர். ராமானுஜரிடம் திருப்பாவைக்கு ஒரு முறை உரை சொல்லும்படி கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் இது.“ஆண்டாள் என்ற பெண்ணின் மனதின் நிலையைச் சொல்லுகின்ற திருப்பாவை பிரபந்தத்திற்கு, ஒரு ஆடவனாக பிறந்த என்னால், முழுமையாக அவள் உணர்ச்சிகளை உணர்ந்து, உரை சொல்ல முடியாது” என்றாராம்.

தொகுப்பு: நாகலட்சுமி

Related Stories: