பைரவருக்கு ஏன் நாய் வாகனம்?

பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடதுபுறம் நேராகவும் நிற்கின்றது. சில கலைஞர்கள் இந்த நாய் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் இரத்தத்தைச் சுவைப்பதுபோலவும் அமைத்துள்ளனர்.

அபூர்வமாகச் சில தலங்களில் நான்கு நாய்களுடனும் பைரவர் அமைக்கப்பட்டுள்ளார். இராமகிரி என்னும் தலத்தில் அன்பர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு பைரவர். சந்நிதியில் நாய் உருவத்தைச் செய்து வைத்துள்ளனர். இதனால் இங்கு நிறைய நாய் சிலைகள் இருக்கின்றன. பிள்ளைப் பேறு வேண்டி இக்கோயிலை வலம் வரும் பெண்கள் இதிலொரு நாய்வடித்தை மடியில் கட்டிக் கொண்டு வலம் வந்தபின் அதை அங்கேயே வைத்துவிட்டு வருகின்றனர்.

மல்லாரி சிவர் என்னும் பைரவர் ஏழு நாய்கள் சூழ இருப்பதாக மல்லாரி மகாத்மியம் கூறுகிறது.பூர்வகாரண ஆகமத்தில் ஆதியில் வேதம் காளை வடிவம் கொண்டிருந்து என்றும் கலியின் கொடுமையால் வலிமையிழந்து இப்போது நாயுருவில் உள்ளது என்றும், அதுவே பைரவருக்கு வாகனமாகியது என்றும் கூறுகிறது. பல்வேறு சமய நூல்களும் வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக இருக்கிறது என்று குறிக்கின்றன. இதையொட்டி பைரவருக்கு நாய் கொடியாகவும் உள்ளது. ஸ்ரீருத்ரத்தில் இறைவன் நாயாகவும், நாயின் தலைவனாகவும் கூறப்படுவது இங்கே எண்ணத்தக்கதாகும். பைரவரின் நாய்க்கு ‘‘சாரமேயன்’’ என்பது பெயராகும்.

Related Stories: