வரலட்சுமி நோன்பின் மகிமை ..

ஆடிமாதம் பதினாறாம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கிறோம். திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலட்சுமி பண்டிகை என்றும் கூறலாம்.

பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை

இந்நாள் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் வருகிறது. குறிப்பாக பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக்கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது.

அம்மனை அழைத்தல்

வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் என்றால் முதல் நாளான வியாழனன்றே அம்மனை அழைக்கிறோம். பூஜை செய்யப்போகுமிடத்தில் கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதை (அரிசி)யைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக்காசு மற்றும் ஒரு எலுமிச்சைப்பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்கிறோம்.

அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண் பொங்கல் நிவேதனம் செய்கிறோம். அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவேற்கிறோம். திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் பெண்கள் வரலட்சுமி விரதம் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும். சில பெண்கள் புகுந்த வீட்டில் வழக்கமில்லாமலிருந்தாலும் பிறந்த வீட்டிலிருந்து நோன்பு எடுத்து வரும் பழக்கம் உள்ளது.ஆனால் இரண்டு பக்கமும் இப்பண்டிகை கொண்டாடும் வழக்கமில்லாமலிருந்தால் தாம் மட்டும் நோன்பு எடுக்கும் வழக்கம் அவ்வளவாகத் தமிழ் நாட்டில் இல்லை. உறவினர்கள் வீட்டில் பண்டிகையில் கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்கலாம். புகுந்த வீட்டில் வரலட்சுமி விரதம் கொண்டாடும் பழக்கமுள்ள வீடுகளில் திருமணம் முடித்த கையோடு இப்பண்டிகைக்கு முன்பாக அம்மனின் திருமுகம், காதோலை, கருகமணியுடன் கூடிய நகைகள் பிறந்த வீட்டுச்சீராக வாங்கித் தருவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பண்டிகைக்கு முதல் நாள் அம்மனை அழைத்து மறுநாள் பூஜை செய்து நோன்பு செய்து ஆராதனை செய்ய வேண்டும்.

வரலட்சுமி பிறந்தகம் வருகிறார்

ஒவ்வொரு வரலட்சுமி விரதத்தின்அம்மன் தம் பிறந்தகத்திற்கு வருவதாக நம்பிக்கை. அவளை அன்புடன் வரவேற்று ஆராதித்து துதிக்கிறோம். மறுநாள் வெள்ளிக் கிழமையன்று விளக்கேற்றி வைத்து நல்ல நேரத்தில் பிள்ளையார் பூஜை செய்து கலசத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து கலச பூஜை செய்து பின் லஷ்மி அஷ்டோத்திரம் முடித்து மலர்களால் அர்ச்சிக்கிறோம்.

மஹா நிவேத்யம்

நிவேதனங்களாக மஹா நிவேத்யம் எனப்படும் அன்னம் பருப்பு வடை, பாயஸம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளும் அளிக்கப்படுகின்றன. பின்பு நோன்புச் சரடிற்குத் தனியே பூஜை செய்து நோன்பு எடுத்ததின் அடையாளமாக வலது மணிக்கட்டில் சரடைக் கட்டிக் கொள்வதோடு பூஜை முடிகிறது. நாள் முழுவதும் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் நல்லது.மாலையில் பால் பழம் நிவேதனம் செய்து இரவு தொடங்கும் நேரம் தீபத்தை சாந்தி செய்யலாம். மறுநாள் சனிக்கிழமையன்று புனர் பூஜை என்கின்ற பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்த சுண்டல்

முதலியவற்றைக் கொடுப்பது வழக்கம்.

அம்மன் மனம் குளிர பாட்டுக்கள் பாடி அரிசி வைக்கும் பாத்திரத்தை பூஜை செய்த இடத்திற்கு அருகே வைத்து ஆரத்தி எடுத்த பின்பு அம்மனை மெதுவாக அந்த அரிசியுடன் கூடிய பாத்திரத்தில் வைத்து மூடி வைப்பார்கள். நம் வரவேற்பையும் ஆராதனைகளையும் ஏற்ற திருமகள் நம்முடன் தங்குவதாக ஒரு ஐதீகம் அல்லது நம்பிக்கை. (மகிழ்ச்சியுடன் புகுந்த வீடு அனுப்பி வைப்பதாகவும் கொள்ளலாம்).

- ஆர்.அபிநயா

Related Stories: