குரு பரிகாரத் தலங்கள் சில

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் சனகாதி முனிவர் நால்வருக்கும் அக்னி தபசு என்ற முனிவருக்கும் பிரம்மதீர்த்தத்தில் தட்சிணாமூர்த்தியின் வடிவில் ஈசன் உபதேசம் செய்த திருக்கோலத்தைக் காணலாம். கும்பகோணம்-நாச்சியார்கோயில்-பூந்தோட்டம் பாதையில் உள்ள சிவானந்தேஸ்வரர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் தட்சிணாமூர்த்தியை கோயிலின் கருவறை விமானத்தில் தரிசிக்கலாம். தஞ்சாவூர்-திருக்காட்டுப்பள்ளி- கல்லணை வழியில், கண்டியூரை அடுத்துள்ள மேலத்திருப்பூந்துருத்தியில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார்கோயில் பெருமாள் கோயிலின் விமானத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கோயிலில் இவருக்குத் தனி சந்நதி இல்லை. மதுரை-திண்டுக்கல் பாதையில் உள்ள கம்பம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி யோக வடிவில் இடது கையில் கமண்டலத்துடன் தரிசனம் அளிக்கிறார்.

திருநெல்வேலி, புளியறையில் ஈசனின் கருவறைக்கு நேர் எதிரே யோக தட்சிணாமூர்த்தியாய் குருபகவான் அருள்கிறார். 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் 27 படிகளைக் கடந்து இவரை தரிசிக்கலாம். இங்கு நவகிரக சந்நதி கிடையாது. குருபகவானே தனிப் பெருங்கருணையோடு அருள்கிறார். திருநெல்வேலி-தூத்துக்குடி பாதையில் உள்ள முறப்பநாடு தலத்தில் மூலவர் கயிலாயநாதரே குருவின் வடிவாய் அருள்கிறார்.

மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் சோழவந்தானை அடுத்து குருவித்துறை உள்ளது. இந்த வைணவத் தலத்தில் குருபகவான் தனி சந்நதி கொண்டு அருள்வது அபூர்வமான அற்புதம்.  தேனி-மதுரை வழியில் உள்ள அரண்மனைப்புதூரிலிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் வேதபுரியை அடையலாம். 9 அடி உயர பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தியின் திருவுருவின் கீழ் கோடிக்கணக்கான மூல மந்திரங்கள் எழுதப்பட்டு பீடத்தின் அடியில் செய்யப்பட்டுள்ளன.

- பரணிகுமார்

Related Stories: