₹67 கோடி மதிப்பில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம்

தர்மபுரி, ஆக.19: தர்மபுரி நகராட்சியில் முதற்கட்ட பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் தினசரி 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. விரைவில் ₹67 கோடி மதிப்பில் 14 வார்டுகளில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார நதியின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, தர்மபுரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ₹32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பாதா சாக்கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்து மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

மதிகோன்பாளையம் அரூர் பிரிவு சாலையில், பாதாள சாக்கடை கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 5 மணி முதல் 8 மணி வரையும், 9 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் பாதாள சாக்கடை மின்மோட்டார் இயக்கி, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இங்கு சுத்திகரிப்பு செய்து இறுதியாக கிடைக்கும் கழிவுமண் படிவம் சேகரித்து வைக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அந்த கழிவுநீர் விவசாய பணிக்கு திருப்பி விடப்படுகிறது. தற்போது தர்மபுரி நகராட்சியில் உள்ள 14 வார்டுகளில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற, ₹67 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி கிடைத்தவுடன், பாதாள சாக்கடை திட்டம் 14 வார்டுகளில் நிறைவேற்றப்படும்.

இதுகுறித்து தர்மபுரி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், தினசரி 50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வசதி உள்ளது. ஆனால், தற்போது 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இயற்கையாக மழை குறைவாக பெய்யும் தர்மபுரி மாவட்டத்தில், விவசாயத்திற்கு சுத்திரிக்கப்பட்ட சாக்கடை கழிவுநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால், சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தில் சேராத நபர்கள், உடனடியாக சேர வேண்டும். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் பாதாள சாக்கடை இணைப்பில் சேர்ந்துள்ளனர். பிறநபர்களை சேர்க்கும் பணிகள் நடக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாத 14 வார்டுகளில் செயல்படுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த அரசு ஆணை வந்துள்ளது. விரைவில் நிதி ஒடுக்கீடு கிடைக்கும். அதன் பின் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர்கள் ெதரிவித்தனர்.

The post ₹67 கோடி மதிப்பில் 2ம் கட்ட பாதாள சாக்கடை திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: