சிவகங்கை, ஆக.24: சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் தொகை பெற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, படித்து முடித்து வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.600 மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை புதுப்பித்து வருபவர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலக உயிர்பதிவேடுகளில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனில் 45வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். ஏற்கனவே வேறு எந்த நிதி உதவியும் பெறுபவர் மற்றும் இதே திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க கூடாது. கல்வி நிலையங்கள் செல்லும் மாணவ,மாணவிகளாக இருத்தல் கூடாது.(தொலை தூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனு தாரர்களுக்கு இது பொருந்தாது) நடப்பு காலாண்டிற்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் தங்களது வங்கி பாஸ்புக்கை தற்போதைய தேதி வரை குறிப்புகள் பதிவு செய்து, படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.தகுதியுடையோர், அனைத்து கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வேலை வாய்ப்பு இல்லாதோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.