ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு : மீண்டும் திறப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட  தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த 22ம் தேதியன்று, 100வது நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஏராளமானோர் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த கொடூர சம்பவத்தால் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசுக்கு எதிராக பலநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகத்திலும் அத்தனை எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஆலை விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்ட நில உரிமை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழக அரசு அவசர அவசரமாக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் கேவியட் மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பிலோ அல்லது அது தொடர்பாக மூன்றாவது நபர் யாரேனும் வழக்கு தொடர்ந்தால் எங்களது தரப்பின் கருத்தை கேட்காமல் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது’’ என கூறப்பட்டுள்ளது. இதேபோல், தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர் ராகேஷ் சர்மா ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதிலும் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

* மே 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

* பிரச்னை பெரிதானதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கிய நிலத்திற்கான ஆணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

* தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்பதால் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: