வேங்கைபட்டியில் மீன்பிடி திருவிழா

 

சிங்கம்புணரி, ஏப்.21: சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியில் உள்ள கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று போட்டி போட்டு மீன்களை பிடித்து சென்றனர். சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியில் நாகண்மாய் உள்ளது. விவசாய பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த கண்மாயில் தண்ணீர் வெகுவாக குறைந்தது. இதையடுத்து கிராமத்தின் சார்பில் மீன்பிடித் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை 7 மணியளவில் கண்மாய் முன்பு வேங்கைபட்டி, கோயில்பட்டி, பிரான்மலை ஐநூத்திபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கண்மாய் முன்பு குவிந்தனர். முக்கியஸ்தர்கள் கொடியசைத்து மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர். வலை, கச்சா, ஊத்தா, தூரி உள்ளிட்ட சாதனங்களைக் கொண்டு பெண்கள் உட்பட ஏராளமானோர் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் அதிக அளவில் கட்லா, ஜிலேபி, விரால், உள்ளிட்ட பெரிய மீன்கள் சிக்கின. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post வேங்கைபட்டியில் மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: