ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் நியமனத்திற்கும் தனித்தனி தேர்வுகள் நடத்தப்படும் : புதிய அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான போட்டித் தேர்வுகளை தனியாகவும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை என்று சுட்டி காட்டி உள்ளது. தமிழ்நாடு பொதுப் பள்ளி கல்வி வாரியக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்று ஆசிரியர் தகுதி தேர்வினை தனியாகவும், இடைநிலை  மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வை தனியாகவும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தி பணி நியமனம் குறித்த உரிய நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை பின்பற்றலாம் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்குப் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும். இனி ஆசிரியராகத் தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வும், ஆசிரியர் பணி நியமனத்துக்குப் போட்டித் தேர்வும் என 2 தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறிபபிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: