சென்னை: அஞ்சல் அலுவலகங்களில் உள்ள கணினிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு அவசரகதியில்அறிமுகப்படுத்தப்பட்ட இணையதள ஒருங்கிணைப்பு காரணமாக தொடர் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, அஞ்சல் ஊழியர்கள் கடந்த மாதம் 20,21 மற்றும் 22ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இணையதள ஒருங்கிணைப்பில் உள்ள கோளாறுகள் சரிசெய்யப்படவில்லை என தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.இந்த நிலையில், தொடர் கோளாறை சரிசெய்ய வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் 2ம் கட்ட போராட்டம் 6ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெறும் என அறிவித்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இந்த போராட்டம் தொடங்கியது. 2வது நாளான நேற்றும் தமிழகம் முழுவதும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்து சர்வர் பிரச்னையை சரிசெய்ய வலியுறுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். குறிப்பாக, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் அஞ்சல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சர்வர் பிரச்னையை சரிசெய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் ஜெ.ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜை அணிந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். 10ம் தேதி (செவ்வாய் கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள கோட்டங்களில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்த இருக்கின்றனர்.
