விழுப்புரத்தில் பரபரப்பு நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகை வெளியேறியதால் மக்கள் அவதி

 

விழுப்புரம், மார்ச் 10: விழுப்புரம் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகை வெளியேறி குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்குள்ளாயினர். இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  விழுப்புரம் நகராட்சியில் வழுதரட்டி, எருமணந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் குப்பை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்ட இந்த குப்பை கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பை என இரண்டு வகையாக தரம் பிரிக்கப்பட்டு சிமெண்ட் ஆலைகளுக்கு மற்றும் இயற்கை உரமாகவும் டன் கணக்கில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் காகுப்பம், எருமணந்தாங்கல் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் எருமணந்தாங்கல் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கில் கொண்டு சென்று தரம் பிரித்து வெளியில் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென்று எருமணந்தாங்கல் குப்பை கிடங்கில் மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி தீக்காடாக காட்சியளித்தது.

மேலும் பிளாஸ்டிக் என்பதால் கரும்புகை வெளியேறி எருமணந்தாங்கல் பகுதி குடியிருப்பு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர். மேலும் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரத்திற்குமேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post விழுப்புரத்தில் பரபரப்பு நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகை வெளியேறியதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: