விழுப்புரம், ஜூலை 17: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில், கடந்த 16ம் தேதி அதிகாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் மோதியதில் பேருந்துகாக காத்திருந்த லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50), கெங்கையம்மாள் (45) ஆகியோர் பலியானார்கள். இச்செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம் (45), கோமளம் (46), பிரேமா (45) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், பலத்த காயமுற்ற நாயகம் அவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் ரூ.50ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அறிக்கை விடுத்துள்ளார்.
The post விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி appeared first on Dinakaran.