×

விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

கிருஷ்ணகிரி, ஜூன் 24: கிருஷ்ணகிரியை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய 39 பேருக்கு ₹15,000, அதிகபாரம் ஏற்றிச் சென்ற 2 வாகனங்களுக்கு ₹40 ஆயிரம், குடிபோதையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய 24 பேருக்கு ₹97 ஆயிரம், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கிய 823 பேருக்கு ₹5.44 லட்சம், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய 2577 பேருக்கு ₹12.49 லட்சம், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கிய 2157 பேருக்கு ₹14.75 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் நடைபெற்ற 279 சாலை விபத்துகளில் 307 பேர் இறந்துள்ளனர். மேலும் 54 பேர் கை, கால்களை இழந்துள்ளனர். கடந்த மே மாதம் பல்வேறு இடங்களில் நடந்த 58 சாலை விபத்துகளில், 60 பேர் இறந்துள்ளனர் என தெரியவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டு நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, அந்த தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளாட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, விபத்தில்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்தார். இந்த கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சப் கலெக்டர் சரண்யா மற்றும் துணை கலெக்டர்கள், டிஎஸ்பிக்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்