விண்ணப்பங்கள் சரிபார்க்கும் கள ஆய்வு நூறு சதவீதம் நிறைவு 15ம் தேதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்

வேலூர், செப்.9: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பங்கள் நூறு சதவீதம் ஆய்வு செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி உரிமைத்தொகை வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், அண்ணா பிறந்த தினமான வரும் 15ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 அவர்களது வங்கிக்கணக்கில் அரசு நேரடியாக செலுத்த உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் தெரிவித்த விவரங்களை கள ஆய்வு செய்யும் பணி நடந்து வந்தது.

இதில் ஊராட்சி செயலாளர்கள், நகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி பில் கலெக்டர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இவர்கள், விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று விண்ணப்பத்தில் அளித்த விவரங்கள் சரியாக உள்ளதா? என அவர்களிடம் கேட்டறிந்து ‘செயலி’ மூலம் பதிவு செய்தனர். இந்த பணி கடந்த 5ம் ேததியுடன் நிறைவு பெற்றது. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 942 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 753 மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 2 கட்டமாக நடந்தது. அதைத்தவிர அரசின் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் விண்ணப்பிக்க 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மொத்தம் மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 682 பேர் மட்டுமே மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். 1 லட்சத்து 5 ஆயிரத்து 71 குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பங்களை பெற்றும் அவற்றை பதிவு செய்யவில்லை. விண்ணப்பங்களின் கள ஆய்வில் 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த பணி நிறைவு பெற்றுள்ளதால் பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சாரிபார்க்கும் பணி கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடந்து வந்தது. இந்த பணியில் டிஆர்ஓ, துணை ஆட்சியர்கள் நிலையான ஆர்டிஓக்கள், தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பிற துறை பணியாளர்களும் ஈடுபட்டு இருந்தனர். இந்த பணி தற்போது நூறு சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து மகளிர் வங்கிக்கணக்கில் உரிமைத்தொகை வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை முதல்வர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் லத்தேரி பகுதியில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post விண்ணப்பங்கள் சரிபார்க்கும் கள ஆய்வு நூறு சதவீதம் நிறைவு 15ம் தேதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: