விண்ணப்பங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும் கலெக்டர் உறுதி

நாகர்கோவில், ஜூலை 22 : குமரி மாவட்டத்தில் தகுதியான அனைத்து நபர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் தர் கூறினார். கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விண்ணப்பபடிவம் மற்றும் டோக்கன் வழங்கும் முறைகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக், உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், தாசில்தார்கள் கண்ணன் (கல்குளம்), ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்) உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

The post விண்ணப்பங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும் கலெக்டர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: