உத்திரமேரூர், டிச.30: உத்திரமேரூரில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு தேமுதிகவினர் ஊர்வலமாக சென்று மவுன அஞ்சலி செலுத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர தேமுதிக சார்பில் உத்திரமேரூர் முக்கிய வீதிகள் வழியாக மெழுகுவர்த்தி ஏந்தியவாறு, மவுன ஊர்வலமாக சென்று உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு, நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின்போது, உத்திரமேரூர் தேமுதிக ஒன்றிய செயலாளர் அழிசூர் கன்னியப்பன், தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post விஜயகாந்த் மறைவிற்கு தேமுதிகவினர் மவுன அஞ்சலி appeared first on Dinakaran.