தூத்துக்குடி, டிச. 8: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிப்பது தொடர்பாக அனைத்து அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மழைநீர் வடிகால், தார் சாலை அமைத்தல், பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைத்தல், நகர்நல மையம் கட்டுதல், மாநகராட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஒருங்கிணைத்து விரைந்து முடிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்
குமார், துணை ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பிரின்ஸ் ராஜேந்திரன், கல்யாணசுந்தரம், இளநிலை பொறியாளர் பாண்டி மற்றும் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. மேலும் மாநகராட்சியின் பல பகுதிகளில் உள்ள இடங்கள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கிடந்தன.
இதையெல்லாம் நாங்கள் பொறுப்பேற்ற பிறகு, கவுன்சிலர்களோடு இணைந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை இனங்கண்டு, அவற்றை கையகப்படுத்தி, சில இடங்களில் மாநகராட்சி பூங்கா அமைத்துள்ளோம். இதனால் மாநகர மக்களுக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. பூங்காக்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல் நலத்தை பேண முடிகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான 60 வார்டு பகுதிகளிலும் அசுர வேகத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். ஒரு சில இடங்கள் தாழ்வாக இருப்பதால் அதனை வருங்காலங்களில் திட்டமிட்டு மழைநீர் தேங்காத வகையில் கட்டமைப்பை உருவாக்கி பணி செய்வோம். மடத்தூர் சாலை முதல் திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையின் இருபுறமும் இரவு நேரங்களில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல 798 புதிய மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன. மாநகரில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் ஜனவரி மாதத்துக்குள் முடித்துக் கொடுக்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
The post வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஆலோசனை appeared first on Dinakaran.