கூடலூர்: வனவிலங்கு மனித மோதலை கட்டுப்படுத்த சூரிய மின்வேலி அமைத்து பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார். நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனுக்கு ஆதரவாக நேற்று சுங்கம் ரவுண்டானா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாயகம் திரும்பிய மக்களுக்கு 800 பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 500 பழங்குடியின மக்களுக்கு 5 கோடி செலவில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கூடலூர் நடுவட்டம் தேவர்சோலை பகுதிகளில் 10 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.கூடலூர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான பிரிவு 17 நில பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா, கதவு எண், மின் இணைப்பு பெற்று கொள்ள முழு சான்றிதழை அரசு வழங்கும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவான நிலங்களை விற்கவும், வாங்கவும் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படும். மின் இணைப்பு இல்லாத அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும். டான் டீ அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த குடியிருப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும். வனவிலங்கு மனித மோதலை கட்டுப்படுத்த சூரிய மின்வேலி அமைத்து பாதுகாப்பு வழங்கப்படும். 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்….
The post வனவிலங்கு – மனித மோதலை தடுக்க சூரிய மின்வேலி அமைக்கப்படும்: முதல்வர் உறுதி appeared first on Dinakaran.