வத்தல்மலையில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி துவக்கம்

தர்மபுரி, ஆக.20: வத்தல்மலையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில், ₹2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தர்மபுரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வத்தல்மலை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியான வத்தல்மலை, சுமார் 225 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த மலைக்காடுகளில் உள்ளூர் தாவரங்கள் மற்றும் காட்டெருதுகள், காட்டுப்பன்றிகள், நீலகிரி லங்கூர், சாம்பார் இன ஆடுகள் மற்றும் எண்ணற்ற மூலிகை தாவரங்கள் உள்ளன. வத்தல்மலையில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, குள்ளனூர், நாயக்கனூர், அரங்கனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் குறைந்த வெப்பநிலை நிலவி வருவதால், வத்தல்மலையில் காபி, மிளகு, ஆரஞ்சு, சப்போட்டா, எலுமிச்சை மற்றும் ரோஜா, செண்டுமல்லி, சாமந்தி, சில்வர்ஓக் மரங்கள் அதிகமாக உள்ளன. மரவள்ளி முக்கியப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் சாமை, திணை, ராகி, கம்பு போன்ற சிறுதானியங்கள் சாகுபடி செய்கின்றனர்.

வத்தல்மலைக்கு கடந்த 2011ம் ஆண்டு வரை, சாலை வசதி கிடையாது. கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, அடிவாரத்தில் இருந்து பஸ் மூலமாக தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. சாலை வசதி கேட்டு, மலைவாழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மலைவாழ் மக்கள் ஒன்றுசேர்ந்து மண் சாலை அமைத்தனர். அதன் பின்னர், கடந்த 2011-2012ம் ஆண்டு அடிவாரத்தில் இருந்து வத்தல்மலை மேல் பகுதி வரைஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டது.

மலை அடிவாரத்தில் இருந்து 23 கொண்டை ஊசி வளைவுகளுடன், சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைத்த பின்னர், பஸ் வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இரு வருடத்திற்கு முன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வத்தல்மலைக்கு நேரில் வந்தார். அங்கு மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், சாலைகள் ஆய்வு செய்து பஸ் வசதியை தொடங்கப்பட்டது. தற்போது வத்தல்மலைக்கு தினசரி பஸ்வசதி உள்ளது.

இதனிடையே, வத்தல்மலையை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து ₹2.25 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தலமாக மாற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வத்தல்மலைக்கு வந்தால் அங்கு தங்கியிருந்து, இயற்கை அழகை ரசிக்க காட்டேஜ் அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. மேலும், பூங்கா அமைக்கும் பணியும் நடக்கிறது. தற்போது விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வத்தல்மலைக்கு வருகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘அடிப்படை வசதிகளுடன் ஏரியில் படகு சவாரி, பார்வை கோபுரம் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 89 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்க இடம்தேர்வு செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தற்போது ஒருசில இடங்களில் மட்டும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. முதற்கட்டமாக தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும். மேலும், வத்தல்மலையில் ஊட்டி, ஏற்காடு போன்று மலர் கண்காட்சி எதிர்காலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழக முதல்வர் வத்தல்மலையை சுற்றுலா தளமாக அறிவித்த பின்னர், சிறுசிறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ₹2.25 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா தலமாக மாற்றும்பணி தற்போது நடந்து வருகிறது,’ என்றனர்.

The post வத்தல்மலையில் சாகச சுற்றுலா தலம் அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: