×

வணிக வரிக்கோட்டம், இணை ஆணையர் அலுவலகம் திறப்பு

ஓசூர், ஜூலை 22: ஓசூரில் வணிக வரிக்கோட்டம், இணை ஆணையர் அலுவலகங்களை, சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, வணிக வரித்துறை சார்பில், புதியதாக உருவாக்கப்பட்ட ஓசூர் வணிகவரிக் கோட்டம், இணை ஆணையர் (மாநில வரிகள்) அலுவலகம் மற்றும் இணை ஆணையர் (நுண்ணறிவு) அலுவலகங்களை நேற்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, ஓசூர் வணிக வரிக் கோட்டம், இணை ஆணையர் (மாநில வரிகள்) அலுவலகத்தில், கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு, ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில் நேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினர்.

இதுகுறித்து கலெக்டர் சரயு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, வணிக வரித்துறையில் தமிழக அளவில் 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 5 நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக தற்போதைய சேலம் வரிக்கோட்டத்திலிருந்து, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ஓசூர் வணிக வரிக்கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இணை ஆணையர் (வணிக வரி) மற்றும் நுண்ணறிவு அலுவலகங்கள், எண்-3/47- சப்தகிரி வாரி மேன்சன், கிருஷ்ணகிரி ரோடு, ஓசூர் என்ற முகவரியில் உள்ள கட்டிடத்தில் செயல்படும்.

இப்புதிய கோட்டத்தில், மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம், பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, வேப்பனஹள்ளி ஆகிய தாலுகாக்களில் பதிவு பெற்ற வணிகர்கள் பயன் பெறுவார்கள். கிருஷ்ணகிரி வணிக வரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி – 1, கிருஷ்ணகிரி – 2 ஓசூர் தெற்கு 1, ஓசூர் தெற்கு 2, ஓசூர் தெற்கு 3, ஓசூர் வடக்கு – 1, ஓசூர் வடக்கு – 2 ஆகிய 7 சரகங்கள் செயல்படும். ஓசூரில் உருவாகியுள்ள புதிய கோட்டத்தில் 2022-23ல் ₹7 கோடியே 45 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இக்கோட்டத்தில் மொத்தம் 25,367 வணிகர்கள் பதிவு பெற்றுள்ளனர்.

பெருவாரியான வரி செலுத்தும் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, இப்புதிய கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, வணிகவரித்துறை இணை ஆணையர்கள் நாராயணன் (நிர்வாகம்), ஜெயராமன் (நுண்ணறிவு), துணை ஆணையர்கள் ஹேமா (கிருஷ்ணகிரி), சங்கரமூர்த்தி, உதவி ஆணையர்கள் நாகராஜ், மூர்த்தி, சீனிவாசன், லாவண்யா அருண் மற்றும் வணிகவரி அலுவலர்கள், வணிகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வணிக வரிக்கோட்டம், இணை ஆணையர் அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Hosur ,Chennai ,Dinakaran ,
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?