சின்னமனூர் :சின்னமனூரில் முல்லை பெரியாறு பாசனம் மூலம் 4 ஆயிரம் ஏக்கரில் முதல் போகம் நெல் சாகுபடி முடிந்து, விவசாயிகள் அறுவடை செய்துள்ளனர். இதில் நெல் விளைச்சல் அமோகமாக இருந்ததால் விவசாயிகள் ஓரளவிற்கு லாபத்தை ஈட்டியுள்ளனர். ெதாடர் மழையால் உடையகுளம், செங்குளம், கருங்கட்டான்குளம், சிறுகுளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
எனவே குச்சனூர் மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று பாசனத்திலும் குளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரையும் நம்பி சுமார் 300க்கும் மேற்பட்ட வயல்வெளிகளில் தற்போது நாற்றங்கால் பாவப்பட்டு 2ம்போக நெல் நடவு பணி தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பகுதிகளில் ஒரே நேரத்தில் வயல்வெளிகளில் சேற்று உழவில் டிராக்டர்கள் பரம்படித்து நெல் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதிலும் அமோக விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.