ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வினியோகம் செய்யக் கூடாது கொள்முதல் முதல் சப்ளை வரை கண்காணிக்க உத்தரவு துவரம் பருப்பு போன்றவை தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

வேலூர், ஆக.18: ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தரமற்ற பொருட்களை வினியோகம் செய்யக் கூடாது என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கண்காணிப்புக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர், உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குதல் மற்றும் குடோன்களில் இருந்து பெறுதல், சரியான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தல், சரியான நேரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளை இக்குழு கண்காணிகிறது. இதேபோல் திடீர் ஆய்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் சில மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்ட பருப்புகள் தரமற்ற முறையில் இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை நிவர்த்தி செய்யும் வகையில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை கிடங்குகளிலேயே சரிபார்த்து தரமான அரிசி மட்டுமே ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தரம் குறைந்த அரிசி கண்டறியப்படும் போது ரேஷன் கடை பணியாளர்கள் அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப தனியாக வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தரமற்ற அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யக் கூடாது. அவ்வாறு வினியோகம் செய்யப்பட்டால் அதற்கு ரேஷன் கடை பணியாளர்களே முழு பொறுப்பாவர். இருப்பினும் சில மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு நுகர்வோர் கையில் கிடைக்கும்போது தரமற்று இருப்பதாக புகார் பெறப்பட்டுள்ளது.

எனவே கொள்முதல் செய்யப்படும் இடத்தில் இருந்து நுகர்வோருக்கு கிடைப்பது வரையிலான அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் துவரம் பருப்பு போன்ற சிறப்பு பொது விநியோக திட்ட பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் பெறப்பட்ட பின்னர் தரம் குறைந்த பொருள் என கண்டறியப்படும்போது அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு திருப்பி அனுப்பிட தனியாக வைக்க வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு தரமுள்ள அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் ஆய்வின்போது கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வினியோகம் செய்யக் கூடாது கொள்முதல் முதல் சப்ளை வரை கண்காணிக்க உத்தரவு துவரம் பருப்பு போன்றவை தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: