சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் மண் பரிசோதனை செய்து மக்கள் வசித்த ஆண்டுகளை கணக்கிடுவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளன. திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடி, கொந்தகை, மணலூர் உள்ளிட்ட கிராமங்களில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தொல்லியல் துறையினர் நடத்திய 6ம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்திய தங்க காதணி, பெரிய விலங்கின் எலும்பு, முதுமக்கள் தாழிகள், அச்சுக்கள், இருவண்ண பானைகள், உறைகிணறு, உலைகலன், பானை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
