சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், 2021ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டமானது, போக்குவரத்துறை செயலாளர் சமயமூர்த்தில தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலான நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை செயலாளர் அவர்கள் தமது தலைமை உரையில், வரும் ஏப்ரல் 6ம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கமானது பின்வரும் அட்டவணையில் கண்டுள்ளவாறு இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 01.04.2021 முதல் 05.04.2021 வரையிலான 5 நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என மொத்தம் 14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன. மேலும், கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள 5 நாட்களில் 01.04.2021 முதல் 03.04.2021 வரையில் நாள்தோறும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் கேயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரு நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகின்ற பேருந்துகள், பண்டிகை நாட்களான பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கபபட்டது போன்று பின்வரும் அட்டவணையில் கண்டுள்ள இடங்களிலிருந்து இயக்கடுகின்றன.
மேலும், சட்டமன்ற தேர்தல் முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 06.04.2021 முதல் 07.04.2021 வரை தினசரி இயக்கப்படுகின்ற 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோவைக்கும், சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் என 1,738 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் tnstc offcial app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.