சென்னை ரயிலின் சிக்னலை சேதப்படுத்தி பயணியிடம் நகை பறித்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு : போலீசார் அதிரடி நடவடிக்கை

திருமலை : எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னலை சேதப்படுத்தி அனந்தப்பூர் மாவட்டத்தில் பயணியிடம் நகை பறித்த கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து காச்சிகூடா செல்லக்கூடிய எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. ஆந்திராவின் தாடிபத்திரி  மண்டலம், வங்கணூர் கிராமம்  அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் ரயில் சிக்னல் ஒயரை அறுத்தனர்.  இதனால் ரயில் செல்வதற்கான சிக்னல் கிடைக்காததால் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.

ரயில் நின்ற சில நொடிகளில்  திடீரென 8 பேர் கொண்ட கும்பல் எஸ்1 பெட்டியில்  ஏறி ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடம் கொள்ளை அடிக்க முயன்றனர்.   இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள்  அலறிக் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கொள்ளை கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடியது. இதுகுறித்து, குண்டக்கல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: