மொளச்சூரில் அரசு கட்டிடங்களை அகற்றிவிட்டு பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

ஸ்ரீபெரும்புதூர், நவ.5: மொளச்சூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை அகற்றிவிட்டு பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மொளச்சூர் ஊராட்சியில் பள்ள மொளச்சூர் பகுதிக்கு செல்லும் சாலையையொட்டி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ₹13 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது.

இதேபோல் கடந்த 2014-2015ம் ஆண்டு ₹30 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய வட்டார சேவை மைய கட்டிடம் கட்டபட்டது. இந்த 2 கட்டிடங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராததால், ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை மொளச்சூர் ஊராட்சியைச் சேர்ந்த மகளிர் குழு கூட்டமைப்பினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மகளிர் குழுவினரும் அந்த கட்டிடத்தை பயன்படுத்துவது இல்லை.

பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படும் இந்த சேவை மைய கட்டிடங்களின் சுவர்களில் விரிசல்கள் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இந்த சேவை மையத்தை சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருவதால் இவற்றை இடித்து விட்டு பூங்கா மற்றும் இளைஞர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மொளச்சூரில் அரசு கட்டிடங்களை அகற்றிவிட்டு பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: