மேட்டுப்பாளையம் நகராட்சியில்முறைகேடாக குடிநீர் இணைப்பு கண்டறிந்தால் நடவடிக்கை

மேட்டுப்பாளையம், செப்.3: மேட்டுப்பாளையம் நகராட்சியின் சிறப்புக்குழு ஆய்வின்போது முறைகேடாக குடிநீர் இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேட்டுப்பாளையம் நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் நகராட்சி அலுவலகத்தை அணுகி இணைப்பை முறைப்படுத்திக்கொள்ளுமாறு மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் இணைப்புகள் நகராட்சி அனுமதி இல்லாமல் இருப்பதாகவும், அதனை கண்டுபிடித்து முறைப்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து சிறப்புக்குழு அமைத்து வீடு வீடாக சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் விரைவில் சேகரிக்கப்பட இருக்கிறது.

இந்த குழு ஆய்வின் போது கண்டுபிடிக்கப்படும் முறைகேடான குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும். அத்துடன் நகராட்சி விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் யாரேனும் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணங்களை செலுத்தி முறைப்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மேட்டுப்பாளையம் நகராட்சியில்முறைகேடாக குடிநீர் இணைப்பு கண்டறிந்தால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: