×

முன் அறிவிப்பு இல்லாமல் நொய்யல் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக அடைப்பு: பொதுமக்கள் அவதி

வேலாயுதம்பாளையம், செப்.19: வேலாயுதம்பாளையம் அருகே நொய்யல் ரயில்வே கேட் முன் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி பராமரிப்பு பணி எனக்கூறி அடைப்பதால் பொதுமக்களும் கடும் வேதனை அடைகின்றனர். கரூர் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் வழியாக கோவை, பல்லடம், திருப்பூர், காங்கேயம், ஈரோடு, வெள்ளகோவில், கொடுமுடி, அரவக்குறிச்சி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பரமத்தி வேலூர், கரூர் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பல்வேறு வகையான லாரிகள், வேன்கள், கார்கள், கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என இரவு பகலாக செல்கின்றன.

இந்நிலையில், நேற்று காலை நொய்யல் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக திடீரென ரயில்வே கேட்டை மூடிவிட்டனர். இதனால், நொய்யல் ரயில்வே கேட்டை கடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டு, நொய்யல் குறுக்குச் சாலையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் புன்னம் சத்திரம் சென்று அங்கிருந்து காகித ஆலை, வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்தி வேலூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். எனவே, இனிவரும் காலங்களில் ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட் அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முன்கூட்டிய தகவல் தெரிவித்து அடைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முன் அறிவிப்பு இல்லாமல் நொய்யல் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக அடைப்பு: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Noyal Railway Gate ,Velayuthampalayam ,Karur District ,Coimbatore ,Palladam ,Tirupur ,Gangeyam ,Erode ,Dinakaran ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே பைக் மோதி தொழிலாளி படுகாயம்