முதலீட்டிற்கு அதிக வருமானம் என ஆசைகாட்டி மோசடி ஆன்லைனில் ரூ.62 லட்சம் இழந்த மாஜி ராணுவ வீரர்

 

புதுச்சேரி, மே 19: புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் (56). முன்னாள் ராணுவ வீரர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலமாக சம்பாதிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என தனது செல்போனில் தேடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போலி நிறுவனத்தில் இருந்து ஒரு லிங்க் அழைப்பு வந்துள்ளது. இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 20% அன்றைய தினமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும். மேலும் முதல் முறை முதலீடு செய்யும் பணத்திற்கு ஈடாக நாங்களும் நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்கிறீர்களோ, அதே அளவு பணம் போனசாக தருவோம் என்றும், எங்களிடம் பிளாட்டினம், பிரீமியம், ஸ்பெஷல் போன்ற பல்வேறு முதலீட்டு பிரிவுகள் உள்ளது என்றும் கூறுயுள்ளனர்.

இதனை நம்பி முருகன், கடந்த ஜனவரி மாதம் ரூ.10,500 முதலீடு செய்துள்ளார். அவர்களும் அதற்கு ஈடாக ரூ.10,500 பணத்தை போட்டு அன்றைய தினமே 30 வீடியோக்களை அனுப்புயுள்ளனர். அதைப் பார்த்து ரிவியூ (கருத்து) சொல்ல வேண்டும் என்றும், ரிவியூ சொன்னவுடன் ரூ.22,200ஐ அவரது வங்கி கணக்கில் பணம் அனுப்பியுள்ளனர். இதன்பிறகு இதை முழுமையாக நம்பி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ரூ.32 லட்சம் அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் அவருடைய செல்போனில் அவர் சம்பாதித்த லாபத்தை சேர்த்து அவரது கணக்கில் ரூ.58 லட்சம் பணம் இருப்பதாக அந்த செயலியில் காட்டியுள்ளது. அந்த பணத்தை அவர் எடுக்க முயன்றார்.

அப்போது, உங்களுக்கு எர்ரர் காட்டுகிறது என்றும், இதற்கு நீங்கள் வரி கட்டினால் தான் மேற்கண்ட பணத்தை நீங்கள் எடுக்க முடியும் என்று சொல்லவே, அதற்கு வரி கட்டுவதற்காக அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்தியுள்ளார். தற்போது அவரது கணக்கில் ரூ.ஒரு கோடியே 15 லட்சம் இருப்பதாக காட்டியுள்ளது. அந்த பணத்தை எடுக்க மேலும் வரி செலுத்த வேண்டும் என்று கூறியதால் தன்னிடம் இருந்த அனைத்து பணம், நகை கடன் தொகை என அனைத்தையும் முதலீடு செய்துள்ளார். மொத்தம் ரூ.62 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனாலும் அவரால் அவரது கணக்கில் இருக்கின்ற பணத்தையே எடுக்க முடியவில்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முருகன், புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதலீட்டிற்கு அதிக வருமானம் என ஆசைகாட்டி மோசடி ஆன்லைனில் ரூ.62 லட்சம் இழந்த மாஜி ராணுவ வீரர் appeared first on Dinakaran.

Related Stories: