×

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

முசிறி, டிச.8: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்து விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் பிச்சைமுத்து தெரிவித்ததாவது: வெள்ளூர் சந்திப்பு கோவில் பகுதியில் இருந்து திருச்சி -சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தவிட்டு மில் வரையில் காட்டுவாய்காலின் தென்கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி விவசாய நிலங்களுக்கு வாகனங்கள் மூலம் இடு பொருள்கள் எடுத்துச் செல்லும் வகையில் சாலை அமைத்து தர வேண்டும்.

ராம சமுத்திரத்தில் இருந்து பாசனத்திற்கு வாய்க்காலில் விடப்படும் தண்ணீரை திருஈங்கோய்மலை கொண்ட உருமாறி மதகு வழியாக மீண்டும் காவிரி ஆற்றுக்குள் எடுத்து விடுவதை நிறுத்தி, மேட்டு வாய்க்கால் மற்றும் பள்ள வாய்க்காலில் விட வேண்டும், இதனால் கோரை, வாழை மற்றும் நெற்பயிர்கள் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பயனடைவர்.

இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார். முசிறி வட்டம் மூவானுர் கிராமத்தில் உள்ள வாரி மற்றும் நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் ராஜன் தெரிவித்தார். கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Musiri District Collector ,Musiri ,Kotaksar Rajan ,Kotaksar ,Dinakaran ,
× RELATED இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு