விழுப்புரம், செப். 14: சுப முகூர்த்த தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: செப்டம்பர் 17ம் தேதி சுபமுகூர்த்த தினம், 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை என்பதால், வார இறுதி நாள்களான செப்டம்பர் 15, 16ம் தேதிகளில் மக்கள் சென்னையிலிருந்து தங்கள் ஊர்களுக்கு அதிகளவில் செல்வார்கள் என்பதால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செப்டம்பர் 15, 16ம் தேதிகளில் கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுபோல விடுமுறையை முடித்து, பொதுமக்கள் மீண்டும் சென்னை போன்ற பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, செப்டம்பர் 18ம் தேதி கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் கூட்டம் குறையும்வரை தேவைக்கேற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் இருந்து கூடுதலாக 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.