மின்னல் தாக்கியதில் 2 வீடுகள் தீயில் எரிந்தது

 

தர்மபுரி, ஜூலை 10: தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை கெண்டயனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமண் காட்டில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில், வெள்ளமண் காடு பகுதியை சேர்ந்த தூங்கப்பன் (80), அவருடைய மகன் ஆண்டியப்பன் (55) ஆகியோரது கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில் கூரை வீட்டில் இருந்த நவதானியங்கள் மற்றும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் ஆடுகள் மேய்க்கச் சென்று விட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து பென்னாகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர் மின்னல் தாக்கி எரிந்த வீடுகள் மீது தண்ணீர் அடித்து முழுவதுமாக தீயை அணைத்தனர். எனினும் 2 கூரை வீடுகளும், வீட்டிலிருந்த தானியங்கள், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்னல் தாக்கியதில் 2 வீடுகள் தீயில் எரிந்தது appeared first on Dinakaran.

Related Stories: