மாவட்டத்தில் 333 ஊராட்சிகளுக்கு இணையதள வசதி

கிருஷ்ணகிரி, ஆக.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகள்ல் இணையதள வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கலம், யுபிஎஸ், ரூட்டர், அலமாரி மற்றும் கண்ணாடி இழை (கேபிள்) உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தினால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், அதிவேக இணைய இணைப்புகள் வழங்கும் பணிகள், பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் 85 சதவீதம் மின்பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் நிறைவடைந்ததும், கிராமப் பகுதிகளில் அகண்ட அலைவரிசை இணைப்புகள், வைபை வசதி ஏற்படுத்துதல், தனிநபர் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கல், அகண்ட அலைவரிசை இணைப்புகளை குத்தகைக்கு விடுதல் மற்றும் செல்போன் டவர்களுக்கு இணைப்புகள் வழங்குதல் ஆகிய முன்னேற்றம் அடைந்த தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, அனைத்து கிராம ஊராட்சி சேவை மையங்கள் மற்றும் வட்டார ஊராட்சி சேவை மையங்கள், இத்திட்டத்தின் இருப்பு புள்ளியாக மாற்றப்பட்டுள்ளன. இச்சேவை மையங்களில் இருந்து 3 கி.மீ சுற்றளவிற்குள் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் உள்ள இணையதள வசதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

கிராம ஊராட்சி சேவை மையங்களில் இருந்து, ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் ஒரு ஜி.பி.பி.எஸ். அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், அரசு சார்ந்த திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் பெற இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், ஊரக வளர்ச்சித்துறை மூலமாக கிராம ஊராட்சிகளில் வீட்டுவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவற்றுக்கான கட்டணங்களை இணையதளம் மூலமாகவே பொதுமக்கள் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்க பாரத் நெட் திட்டமானது, தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இப்பணி வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது.

இத்திட்டத்திற்கான அலமாரி, யுபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்ட அறை, சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்யவும், பிஓபி பொருத்தப் பட்டுள்ள அறையில், வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர், அரசு ஆணையின்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும், இணையதள வசதிகளை பெறமுடியும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், பிஓபி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யுபிஎஸ், ரூட்டர், அலமாரி மற்றும் கண்ணாடி இழை (கேபிள்) உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சரயு கூறினார்.

The post மாவட்டத்தில் 333 ஊராட்சிகளுக்கு இணையதள வசதி appeared first on Dinakaran.

Related Stories: