×
Saravana Stores

மாவட்டத்தில் 14,291 பேருக்கு ₹25 கோடி மதிப்பில் சிகிச்சை

கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு வருடத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 14,291 பயனாளிகளுக்கு ₹25.06 கோடி மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம், மல்லப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிறப்பு பதிவு சேர்க்கை முகாம் நடந்தது. முகாமினை நேற்று மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து துறை சார்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு, பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத திட்டத்தின் கீழ், 100 சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடைபெறுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லப்பாடி துவக்கப்பள்ளி, போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோயில் மைதானம் ஆகிய மூன்று சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு சேர்க்கை முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் நகல் அட்டையுடன் வந்து பதிவு செய்து கொண்டனர். இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கலைஞரால் கடந்த 23.7.2009ம் தேதியன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 23.9.2018ம் தேதி முதல் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 1513 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீரிக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் அளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 27 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் 14 ஆயிரத்து 291 பயனாளிகளுக்கு ₹25 கோடியே 6 லட்சம் மதிப்பில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 89 ஆயிரத்து 358 குடும்பங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு, காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில், ₹1லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று (₹1.20 லட்சம் மற்றும் அதற்கு குறைவான) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.32ல் செயல்படும் மையம் அல்லது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நான்காம் தளத்தில் உள்ள அறை எண்.406ல் இயங்கி வரும் மற்றொரு மையத்திலும் அணுகி இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் சரயு பேசினார்.

நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் சையத்அலி, தாசில்தார் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையத்பயாஸ் அகமத், செந்தில், ஊராட்சி மன்றத் தலைவர் சரோஜினி ஞானவேல், துணைத் தலைவர் ஜெகதீசன், ஒன்றிய குழு உறுப்பினர் பாட்சாமியான், ஊராட்சி மன்ற உறுப்பினர் மாதப்பன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அறிஞர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 14,291 பேருக்கு ₹25 கோடி மதிப்பில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,
× RELATED ஓசூர் பகுதியில் தொடர் மழையால் சாமந்திப்பூ விலை வீழ்ச்சி