மும்பை: மெகுல் சோக்சி மேலும் 34 வங்கிகளில் ₹6,086.29 கோடி மோசடி செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடியின் மருமகன் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13,600 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு வெளியானதும் இருவரும் கடந்த கடந்த ஜனவரியில் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த வழக்கை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நீதிமன்றத்தில் மெகுல் சோக்ஷி மீது கடந்த மாதம் 28ம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்யப்பட்ட ₹13,600 கோடி மோசடியை தவிர வேறு வங்கிகளிலும் மெகுல் சோக்சி கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். நக்ஷத்திரா பிராண்ட் லிமிடெட் நிறுவனம் மூலம் ₹434.12 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். ஆஸ்மி ஜூவல்லரி இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் ₹386.02 கோடி, கில்லி இந்தியா நிறுவனம் மூலம் ₹377.14 கோடி, கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் பல வங்கிகளில் மொத்தம் ₹4,889.01 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளார். மொத்தம் 34 வங்களில் மெகுல் சோக்ஷி ₹6,086 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளார். மோசடி செய்வதற்கு வசதியாக இந்தியாவில் மட்டுமல்ல, ஹாங்காங், அமெரிக்கா, ஐக்கிய அரபு குடியரசு உட்பட பல நாடுகளில் பல நிறுவனங்களை தொடங்கியிருக்கிறார். கடன் பெறுவதற்கு வசதியாக ஏற்றுமதி செய்யப்படும் வைரங்களின் மதிப்பை அதிகரித்து காண்பித்துள்ளார். இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இதில் ஐக்கிய அரபு குடியரசில் உள்ள கீதாஞ்சலி வெஞ்சர் நிறுவனத்தின் இயக்குனர் அனுப்பிய இ மெயிலும் அடங்கும். அந்த இ மெயிலில் வைரங்கள் தரம் குறைவாக இருக்கின்றன. இந்தியா அல்லது துபாயில் இருக்கும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தால் பெரும் சிக்கல் ஏற்படும் என்று குற்றபத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!