மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க முதல்வரிடம் மனு

 

ஈரோடு, அக். 25: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தகுமார், பீட்டர் அந்தோணிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: 1-4-2003ம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஈட்ய விடுப்பு ஒப்படைப்பு பண பலனை மீண்டும் வழங்கிட வேண்டும். 7வது ஊதிய குழுவில் 21 மாத நிலுவை தொகையையும், ஏற்கனவே ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு வழங்கிய அகவிலைப்படி உயர்வை நிலுவையின்றி வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள தொகுப்பூதிய, மதிப்பூதிய மற்றும் புற ஆதார பணி நியமனங்களை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.

தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெற்று வரும் அனைவரையும் நிரந்தர பணியாளராக அறிவித்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும ஊராட்சி பணியாளர்கள் அனைவரையும் அரசு பணியாளர்களாக அறிவித்து, அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

The post மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க முதல்வரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: