×

மழைக்கால நோய்களை தவிர்ப்பது எப்படி? அரசு மருத்துவர்கள் அறிவுரை

 

மதுரை, நவ. 6: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து மதுரை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ளவர்கள் திடீர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் சளி போன்ற உடல் உபாதைகளுக்குள்ளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: மழைகாலங்களில் குடிநீரை நன்கு காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும். முடிந்தவரை மழையில் நனையாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுகாதாரமான ஆடைகளை அணிய வேண்டும். சூடான மற்றும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அசைவத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அக்கி, அம்மை நோய் பாதிப்புகள் மழைக்காலத்தில் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நீர் காய்கறிகளான சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட், முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, தண்டங்கீரை, பசலைக்கீரை போன்றவற்றை பயன்படுத்தலாம். கம்பு, கேழ்வரகு போன்ற முளைகட்டிய தானிய வகைகளை உட்கொள்ளலாம்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழைகாலங்களில் கொசுக்களால் தான் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை விரட்ட காயில்களை பயன்படுத்தினால் உடல் நலக்கேடு ஏற்படும். எனவே, கொசுவை விரட்ட வேப்பிலையால் புகை ஏற்படுத்திக்கொள்ளலாம். சுற்றுப்புறங்களில் பயன்படுத்தாமல் போட்டுள்ள பொருட்களில் மழைநீர் தேங்காமல் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மழைக்கால நோய்களை தவிர்ப்பது எப்படி? அரசு மருத்துவர்கள் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு