மர்ம நபர்கள் தீ வைத்த கோயில் உண்டியல் திறப்பு: ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பணத்தாள்கள் எரிந்து நாசம்

 

வானூர், ஆக. 7: கிளியனூர் அருகே மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கோயில் உண்டியல் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பணத்தாள்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் காவல் நிலையத்துக்குட்பட்ட மொளசூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற அய்யனார் கோயில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த கோயில் முன்பு நிறுத்தி பூஜை செய்து விட்டு செல்வதால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் காணிக்கை பணமும் அதிகளவில் வரும்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அய்யனார் கோயில் முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக சுவரில் இரும்பு உண்டியல் புதைக்கப்பட்டிருந்தது. இதற்கான பூட்டு சுவற்றின் மறுபுறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தினர் மட்டுமே இதனை திறக்க முடியும். முன்புறம் காணிக்கை செலுத்தும் வசதி மட்டுமே உள்ளது. கடந்த 3ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் அய்யனார் கோயில் உண்டியலை உடைக்க முயன்று உடைக்க முடியாததால் ஆத்திரமடைந்து, ஒரு பேப்பரில் தீ வைத்து உண்டியல் உள்ளே வீசிவிட்டு சென்று விட்டனர். இதில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எரிந்து சேதமானது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் திண்டிவனம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ்குமார் கிளியனூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ வைத்து எரிக்கப்பட்ட உண்டியலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திவாகர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பணத்தாள்கள் எரிந்து சேதமடைந்திருந்தன. மேலும், நாணயங்கள் எவ்வித சேதமும் இன்றி அப்படியே இருந்தன. இச்சம்பவம் குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மர்ம நபர்கள் தீ வைத்த கோயில் உண்டியல் திறப்பு: ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பணத்தாள்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: