மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும்

நன்றி குங்குமம் டாக்டர்சபாஷ்சுத்தமான மழைநீர் கூட உரிய நேரத்தில் அகற்றப்படாவிட்டால், கொசுக்களை உற்பத்தி செய்யும் கூடாரமாக நாளடைவில் மாறிவிடுகிறது. எனவே, தேவையற்றவைகளை எந்த அளவுக்கு வேகமாக அகற்றுகிறோமோ அந்த அளவுக்கு சுகாதாரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும். அதிலும் தொற்றுநோய் அபாயம் மிகுந்த மருத்துவக் கழிவுகளை இன்னும் வேகமாகவும், பத்திரமாகவும் அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து புதிய அறிவுரை ஒன்றை தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியிருக்கிறது.தமிழகத்தில் சென்னையைப் பொருத்தவரை, மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களும் 2 ஆயிரம் வார்டுகளும் உள்ளன. இவற்றிலிருந்து தினசரி 5 ஆயிரம் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவற்றை 2 ஆயிரத்து 500 டன்னாக குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர்த்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளிலிருந்து நாள் ஒன்றுக்கு 11 ஆயிரத்து 500 கிலோ மருந்து கழிவுகள் உற்பத்தியாகின்றன. இந்த மருந்து கழிவுகள் அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உருவாகும் மருந்து கழிவுகளை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள 500 மருத்துவமனைகளைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்புக் குழு தலைவரும், நீதிபதியுமான ஜோதிமணி சில விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ‘மருத்துவமனைகளில் சேகரமாகும் மனித உடல் சார்ந்த கழிவுகளை 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். அந்த கழிவுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். மற்ற திடக் கழிவுகளோடு மருத்துவக் கழிவுகளை சேர்க்கக் கூடாது. அப்படி கலப்பது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது’ என்றும் எச்சரித்திருக்கிறார். – கௌதம்

The post மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: