மயிலாடுதுறை,ஆக.28: மயிலாடுதுறை காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிலையை ஊஞ்சலில் ஆட்டி பக்தர்கள் கொண்டாடினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா கிருஷ்ணர் ஆலயங்கள், வீடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவித்து, கிருஷ்ணருக்கு பிடித்த சீடை, முறுக்கு, வெண்ணை, பழவகைகள் வைத்து படையலிட்டு குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மேலஒத்தசரகு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயமான காளிங்க நர்த்தன கிருஷ்ணன் ஆலயத்தில் 103ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக குழந்தை சந்தனாகிருஷ்ணன் மலர் தொட்டிலில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சந்தானகிருஷ்ணனுக்கு நைவைத்தியம் படைக்கப்பட்டு தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று கிருஷ்ணனை ஊஞ்சலில் வைத்து ஆட்டி வழிபாடு செய்தனர். கோவில்களுக்கு ராதை கிருஷ்ணராக வேடமணிந்து வந்த குழந்தைகள் பக்தர்களை கவர்ந்தனர்.
The post மயிலாடுதுறையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.