மனைவி தற்கொலை வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்ற கணவன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது: குஜராத்தில் பதுங்கியவரை போலீசார் சுற்றிவளைத்தனர்

பெரம்பூர், செப்.3: மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்று, தலைமறைவான கணவரை, 3 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் வைத்து கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி முதல் தெருவில் வசித்து வந்தவர் தாடி வெங்கடாசூரி அப்பாராவ் (40). இவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கொடுங்கையூரில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2006ம் ஆண்டு சத்திய ஜோதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அக்ஷயா (14) மற்றும் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், 2010ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி வரதட்சணை கொடுமையால் சத்யஜோதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு கணவர் தாடி வெங்கடசூரி அப்பாராவ் தான் காரணம் என சத்யஜோதியின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு எழும்பூரில் உள்ள மகிளா அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2012 செப்டம்பர் 14ம் தேதி தாடி வெங்கடசூரி அப்பாராவுக்கு மகிளா நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாடி வெங்கட சூரி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் மகிளா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றமும் 2020 மார்ச் 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு வந்த நாள் முதல் தாடி வெங்கடசூரி தலைமறைவானார். அவரை பிடிக்க தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் வட மாநிலத்தில் தலைமறைவானார்.

இதையடுத்து எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மேற்பார்வையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தாடி வெங்கட சூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தாடி வெங்கடசூரி தலைமறைவாக இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொடுங்கையூர் சப்இன்ஸ்பெக்டர் முரளி சங்கர், காவலர்கள் சதீஷ்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் காந்திநகர் பகுதியில் வைத்து தாடி வெங்கடசூரியை கைது செய்தனர்.

அவர் அங்குள்ள ஒரு யுனிவர்சிட்டியில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ட்ரான்சிட் வாரன்ட் பெற்று நேற்று காலை தாடி வெங்கடசூரியை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன் மூலம் மனைவி தற்கொலை வழக்கில் 10 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை பெற்று மூன்றாண்டு தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மனைவி தற்கொலை வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்ற கணவன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது: குஜராத்தில் பதுங்கியவரை போலீசார் சுற்றிவளைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: