தேனி, நவ. 21: மது பழக்கத்தால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வேதனையடைந்த ஜவுளி வியாபாரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனி நகராட்சிக்குட்பட்ட பொம்மையக்கவுண்டன்பட்டி தெற்கு புதுத்தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் பாலமுருகன்(44). இவருக்கு சிந்துஜா என்ற மனைவியும், 12 வயதில் மகனும் உள்ளனர். ஜவுளி வியாபாரம் செய்து வந்த பாலமுருகன் தற்போது சின்னமனூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகனுக்கு வயிற்றில் நீர்கட்டி ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதனால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை கண்டித்த அவரது மனைவி, மகனுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் அவர் திரும்பி வந்தபோது வீட்டின் முன் ஹாலில் பாலமுருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சிந்துஜா அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுவால் மனைவியுடன் தகராறு ஜவுளி வியாபாரி தற்கொலை appeared first on Dinakaran.