மண்மாதிரி ஆய்வு முடிவுகளின்படி பயிர்களை தேர்வு செய்து பயிரிட்டால் குறைந்த செலவில் கூடுதல் மகசூல்

 

அரியலூர், ஆக.11: அரியலூர் மாவட்டத்தில் 1,10,000 எக்டரில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலங்களில் மண்மாதிரி ஆய்வு முடிவுகளின்படி பயிர்களை தேர்வு செய்து உரம் இடுவதால் சாகுபடி செலவை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்தி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மண்மாதிரி பரிசோதனை பயன்கள்: மண்ணில் உள்ள களர் அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திடவும் உதவுகிறது. மண்ணில் உவர்;தன்மைகளை அறிந்து வடிகால் வசதியை பெருக்குதல், உப்பைத்தாங்கி வளரும் சூரியகாந்தி, பருத்தி மற்றும் மிளகாய் பயிர்களை சாகுபடி செய்திட உதவுகிறது.

மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும், மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிந்திடவும், பயிர்களுக்கு தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும் உதவுகிறது. இதன் மூலம் தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச்செலவை குறைக்கலாம். இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும், அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரை தேர்ந்தெடுக்கவும் அவசியமாகிறது. மண் மாதிரி சேகரிப்பது: ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த வயலின் சராசரி தன்மையைக் காட்டும் வகையில் இருக்க வேண்டும்.

மண்ணின் வளமும் தன்மையும் ஒரே வயலில் கூட இடத்திற்கு இடம் மாறுபடும் ஆகையால் ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்க கூடாது. ஏக்கருக்கு குறைந்தது 10 இடங்களில் எடுத்து கலந்து அதிலிருந்து கால் பங்கீட்டு முறையில் அரை கிலோ மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல் மண்ணை நீக்காமல் கையினால் அப்புறப்படுத்த வேண்டும். ஆங்கில எழுத்து “V” வடிவக்குழி குறிப்பிட்ட ஆழத்திற்கு வெட்ட வேண்டும். குழியின் இரு பக்கங்களிலும் மேலிருந்து கீழ் வரை ஒரே சீராக அரை அங்குல கனத்தில் செதுக்க வேண்டும். வெட்டிய மண்ணை ஒரு சட்டியிலோ அல்லது சாக்கிலோ போட வேண்டும்.

காய்ந்து வெடித்த வயலின் குழி வெட்ட சிரமமாக இருந்தால் மண் கட்டி ஒன்றை பெயர்த்து மேலே வைத்து அதன் பக்கவாட்டில் உள்ள மண்ணை குறிப்பிட்ட ஆழத்திற்கு செதுக்கி எடுக்க வேண்டும். வயலில் சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும் (அல்லது) காகித விரிப்பில் மண்ணை சீராக பரப்பி 4 சமபாகங்களாக பிரிக்கவும். பின்னர் எதிர் எதிர் மூலையில் உள்ள பாக மண்ணை நீக்கி விடவும். மீண்டும் மண்ணை பரப்பி முன்பு செய்தது போல 4 சமபாகங்களாக பிரித்து வேறு எதிர் எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கிவிட வேண்டும். மண்மாதிரி 500 கிராம் என்ற அளவில் எடுத்து, துணி பையில் சேகரிக்க வேண்டும்.

பின்னர் மண் மாதிரி பையில் விபரத்தாளில் பெயர் மற்றும் முகவரி, சர்வே எண், முந்தைய பயிர், சாகுபடி செய்யப்படவுள்ள பயிர், மானாவாரி, இறவை, கைபேசி எண், ஆதார் எண், உடன் விபரங்களுடன் மண்மாதிரியை சமர்ப்பிக்க வேண்டும். மண் ஆய்விற்கு மண் மாதிரி ஆய்வுக் கட்டணம் ரூ.10, நுண்ணூட்ட ஆய்வுக் கட்டணம் ரூ.10, பாசன நீர் ஆய்வுக் கட்டணம் ரூ.20 செலுத்த வேண்டும். இத்தகைய பயன் தரக்கூடிய மண்மாதிரியை அனைத்து விவசாயிகளும் தங்கள் வயல்களில் எடுத்து ஆய்வு முடிவின் அடிப்படையில் உரம்மிட்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post மண்மாதிரி ஆய்வு முடிவுகளின்படி பயிர்களை தேர்வு செய்து பயிரிட்டால் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் appeared first on Dinakaran.

Related Stories: