ஜல் ஜீவன் திட்டத்தில் நடப்பாண்டில் 40 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு: தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் தகவல்

சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு குடித்தல், மதிய சத்துணவிற்காக சமைத்தல், கை கழுவுதல் மற்றும் கழிப்பறைகளுக்கு தேவையான குடிநீரை குழாய் இணைப்புகளை அமைத்து, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கும்பொழுது பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினத்தை முன்னிட்டு 100 நாட்களில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்புகள் அமைக்கும் பொருட்டான மத்திய அரசின் அறிவிப்பை,  

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அமைச்சர் வேலுமணி வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்து ஊரகப் பகுதிகளின் 37,741 பள்ளிக்கூடங்கள் மற்றும் 39,459 அங்கன்வாடி மையங்கள் இருப்பதாக இத்திட்டத்தில் கணக்கிடப்பட்டது.

இந்த திட்டத்தை 10 ஜனவரி 2021க்குள் முடிப்பதற்கு உயர்மட்ட அதிகாரிகள் மூலம் காணொலி மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு தொடர் நடவடிக்கைகள் எடுப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டது. இதன் பயனாக மேற்கண்ட திட்டத்தை 30 டிசம்பர் 2020க்குள் முடித்து அனைத்து ஊரக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் நடப்பாண்டில் 40 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கிடப்பட்டுள்ளது, கடந்த 6 மாதங்களில் சுமார் 11 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு ஊரகப் பகுதிகளுக்கான குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு முதலிடம் அளித்து இத்திட்டத்தை சிறப்பாக செயலாக்கி ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தகுந்த அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: