மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளியுடன் விடிய, விடிய பெய்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன

மஞ்சூர், ஜூலை 23: மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் விடிய, விடிய சூறாவளியுடன் பெய்த சாரல் மழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மழையுடன் இடைவிடாமல் பலத்த சூறாவளியும் வீசி வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் துவங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. மழையுடன் விடிய, விடிய சூறாவளி காற்றும் வீசியது. இதில் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் கேரிங்டன் ஜங்ஷன் உள்பட 3 இடங்களில் சாலையோரங்களில் இருந்த ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை, இரியசீகை பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

நேற்று காலை கிண்ணக்கொரையில் இருந்து மஞ்சூர் மற்றும் ஊட்டி பகுதிகளுக்கு சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சம்பவ இடத்தின் இருபுறங்கிலும் அணிவகுத்து நின்றது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் கடும் அவதிகுள்ளானார்கள். இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை குந்தா உதவி பொறியாளர் பெருமாள் மேற்பார்வையில் சாலை ஆய்வாளர் நஞ்சூண்டன் மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து வந்து சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். நீண்ட போராட்டத்திற்கு பின் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.

இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு சுற்றுப்புற பகுதிகளிலும் இரவு விடிய, விடிய பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதில் அண்ணாநகர், இந்திராநகர் இடையே ராட்சத மரம் வேரோடு சாய்ந்ததில் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியோடு மரத்தை வெட்டி அகற்றி சீரமைத்தனர். மஞ்சூர் அருகே முள்ளிமலை கண்டி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டு பெரிய மரங்கள் வளர்ந்திருந்தது. ஒரே வேரில் இரண்டு பிரிவுகளாக வளர்ந்த இம்மரங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்தது என அப்பகுதியினர் கூறுகின்றனர். இம்மரத்தை சுற்றிலும் கற்களை கொண்டு சுற்றுச்சுவர் போல் அமைத்துள்ளனர். கோயில் மரமாக கருதப்பட்டு முள்ளிமலை கிராமத்தினர் வணங்கி வந்தார்கள்.

இந்நிலையில் நேற்று காலை இப்பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றில் மரத்தின் ஒரு பகுதியானது முறிந்து பின்புறம் உள்ள பள்ளி கட்டிடத்தின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கட்டிடத்திற்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. பள்ளி விடுமுறை என்பதாலும் மாணவர்கள் தப்பினர்.மரம் விழுந்ததில் கண்டியில் இருந்து முள்ளிமலை கிராமத்திற்கு செல்லும் நடைபாதையில் கிளைகள் தொங்கியதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ராஜன் விரைந்து வந்து பார்வையிட்டு அங்கிருந்த தொழிலாளர்களின் உதவியோடு மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதேபோல் அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி பகுதிகளிலும் சாரல் மழையுடன் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் இடைவிடாமல் வீசிவரும் சூறாவளியால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்து வருவதால் மஞ்சூர் சுற்றுப்புற அனைத்து பகுதிகளிலும் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தேயிலை தொழிற்சாலைகள், ஸ்டுடியோ, ஜெராக்ஸ் கடைகள் உள்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.

The post மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளியுடன் விடிய, விடிய பெய்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன appeared first on Dinakaran.

Related Stories: