அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழியர் வீட்டில் 14 மணி நேரம் ஐடி ரெய்டு: ரூ.50 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் வீட்டில் 14 மணி நேரம் நடந்த சோதனையில் ரூ.50 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, பண பரிமாற்றம் நடப்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட காவல் அதிகாரியை மாற்ற வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கருத்துக்கணிப்புகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இதில், திமுகதான் வெற்றி பெறும் என முடிவுகள் வெளியாகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சியினர் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் வீரபாண்டி(32). இவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாருக்கு பி.ஏ.வாக உள்ளார். விராலிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் தடுப்பு பிரிவில் கண்காணிப்பாளராகவும் (தற்காலிக ஊழியர்) உள்ளார். இலுப்பூர் மேட்டு சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லூரியிலும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு விராலிமலையில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு இவரது வீட்டிற்கு திருச்சி மண்டல வருமானவரித்துறை துணை ஆணையர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் 10 பேர் 4 கார்களில் வந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். பின்னர் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் பக்கத்தில் வாடகை விட்டிலிருந்த அவருக்கு சொந்தமான 8 வீடுகளிலும் சோதனை நடத்தினர். மாலை 4 மணி அளவில் 3 அதிகாரிகள் மட்டும் வெளியே வந்து காரில் திருவேங்கைவாசலில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் சோதனை நடத்தினர்.

பின்னர், 5 மணிக்கு வீரபாண்டியின் வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக, 4 மணி அளவில் மதுரையிலிருந்து நில மதிப்பீட்டாளர்கள் 3 பேர் காரில் வந்தனர். அவர்கள் வீரபாண்டி வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். இவர்கள் வீரபாண்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை மதிப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நேற்று, அதிகாலை 2 மணிக்கு முடிந்தது. 13 மணி நேரமாக நடந்த இந்த சோதனையில் ரூ.50 லட்சம் பணம், கோடி கணக்கில் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அவற்றை அட்டை பெட்டியில் வைத்து பேக் செய்து வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

இந்தநிலையில், தேர்தல் ஆணைய கெடுபிடிக்கு மத்தியில் விராலிமலை தொகுதியில் பண பரிமாற்றத்துக்கு காவல் துறை அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் 6 மாதங்களுக்கு முன்னதாகதான், கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் சுகாதாரத்துறையில் பணியாற்றி உள்ளார். அதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் சிபாரிசால்தான் புதுக்கோட்டைக்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விசுவாசத்தில் அமைச்சர் சொல்வதை கலெக்டர் தட்டாமல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் எஸ்பி பாலாஜி சரவணன் கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வருகிறார். பண பரிமாற்றத்தை தடுக்க காவல் துறை வட்டாரத்திலும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை என்றே கூறப்படுகிறது. எனவே, அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் கலெக்டர், காவல் துறை அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும் வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சகோதரர் கல்லூரியில் பொங்கல் பானைகள் சிக்கியது

அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு சொந்தமான கல்லூரியில் பறக்கும் படையினர் நேற்று மாலை 6 மணிக்கு 2 குழுவாக வந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை 7.30 மணி வரை நடந்தது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒரு டாட்டா ஏஸ் வாகனத்தில் ஏற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பிரித்து பார்த்ததில் 13 மூட்டைகளில் 650 பொங்கல் பானைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர்பட்டியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ஒரு காரில் அதிமுக கரை போட்ட 60 வேட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: