மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் அமைச்சர் ஆய்வு

 

ஊட்டி, ஜூலை 29: குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மிசின்ஹில், அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாமை, தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாம் 204 இடங்களில் 24ம் தேதி துவங்கியது. ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறும்.

இம்முகாம்களில் பொதுமக்கள் எந்தவித சிரமமுமின்றி வந்து விண்ணப்பம் பதிவு செய்யும் வகையில், காலை 30 விண்ணப்பங்களும், மாலையில் 30 விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது. குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மிசின்ஹில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முதற்கட்ட சிறப்பு முகாம் ஆய்வு செய்யப்பட்டு, பொது மக்கள் வழங்கும் அனைத்து விண்ணப்பங்களும் தமிழக அரசு தொிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி பதிவு செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் அவர்களுக்கு முழுமையாக படிவங்களை நிரப்ப உதவி செய்ய வேண்டும் என முகாமில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாம் கட்ட முகாம் 5-8-2023 முதல் 16-8-2023 வரை நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது’’ என்றார். அப்போது, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் முகாம் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: