ஊட்டி: ஊட்டி மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்படவில்லை. தனியார் அமைப்பு 4 நாட்களுக்கு மட்டும் வாடகைக்கு மட்டும் எடுத்து இயக்கி வருகிறது. சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் பொய்யானது என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் பெரும்பாலானவர்கள் ஊட்டி மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சில சமயங்களில் பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி வாடகைக்கு ரயிலை எடுத்து பயணிப்பது வழக்கம்.
கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு மார்ச் மாதம் முதல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. நாடு முழுவதும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ஊட்டி மலை ரயில் இயக்கப்படவில்லை. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். எனினும், ஊட்டி மலை ரயில் இயக்கப்படவில்லை.
அதேசமயம், ஒரு தனியார் நிறுவனம் மலை ரயிலை 4 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு ரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு இயக்கப்பட்டது. அந்த தனியார் நிறுவனம் ரயில் பெட்டிகள் மற்றும் இருக்கைகளில் தன் பெயர் கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியது. இதனால், சிலர் மலை ரயிலை, ரயில்வே நிர்வாகம் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட எம்.பி. நடராஜனும் இது தொடர்பாக கண்டனத்தை தெரிவித்துவிட்டார். இதனால், இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. ஆனால், தனியார் நிறுவனம் வாடகைக்கு மட்டுமே ரயிலை எடுத்துள்ளது. வழக்கமாக ஓடும் ரயிலுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாலும், பொது போக்குவரத்திற்கு தடை இருந்ததாலும் மலை ரயில் கடந்த மார்ச் மாதம் முதல் இயக்கப்படாமல் உள்ளது. அதேசமயம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஊட்டி மலை ரயிலை கடந்த 6, 7ம் தேதிக்கும், வரும் 12, 13ம் தேதிகளில் இயக்க வாடகைக்கு மட்டுமே எடுத்துள்ளது. அதற்கும், வழக்கமாக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயிலுக்கும் சம்பந்தமும் இல்லை. மலை ரயில் தனியாருக்கு தாரை வார்க்கப்படவில்லை.
ஆனால், சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மலை ரயில் வழக்கம் போல் இயக்கப்படும். ஓரிரு நாட்களில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் வழக்கமாக இயக்கப்படும் மலை ரயிலை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலை ரயில் இயக்கும்போது, ஏற்கனவே பெறப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இவ்வாறு அவர்கள் கூறினார்.