கோவை, ஜன. 29: கோவையில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னாள் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை கணபதி அருகே உள்ள மணியகாரம்பாளையத்தில் தனியார் பள்ளி சார்பில் குழந்தைகளுக்கான வன்கொடுமை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் மாற்று திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இது குறித்து சைலேந்திரபாபு கூறுகையில், ‘‘தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை துவங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டது.
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது. குழந்தைகள் மினிமம் 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும். அதற்கு இது மாதிரியான ஓட்டப்போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன்வர வேண்டும்.’’ என்றார்.
The post போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் appeared first on Dinakaran.