போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

அம்பத்தூர், அக். 19: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் காவல் ஆணையர் சங்கர் தலைமையில், காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு சமூக அமைப்பினர்கள், வியாபாரிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில், அம்பத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் முதன்மை பிரச்னையாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை கருத்தில் கொண்டு ஆவடி காவல் ஆணையர் சங்கர், ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் உத்தரவின்படி, அம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதியின் முக்கிய இடங்களில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, நேற்று போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில், உதவி கமிஷனர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், பாபு மற்றும் சென்னை மாநகராட்சி நிலை குழு தலைவர் சாந்தகுமாரி முன்னிலையில் அம்பத்தூர் வெங்கடாபுரம், கே.கே.மணி சாலை, ஷாப் தெரு பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் தினமும் சிரமமின்றி சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளை ஆவடி கமிஷனர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். போக்குவரத்து காவலர்கள் தலைமையில் அம்பத்தூர் பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளில் குறிப்பாக அம்பத்தூர் பேருந்து நிலையம், அம்பத்தூர் மார்க்கெட் மற்றும் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், வாகன நிறுத்தங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களையும் சீர்செய்து, பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

The post போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: